பாரம்பரிய பயிர்ச்செய்கையில் ஈடுபட விவசாயிகளுக்கு முழுமையான அனுமதி

222 0

பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான அனுமதி வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

6வது “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்தார்.

பாரம்பரிய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் என்று வனவிலங்கு, வன பாதுகாப்பு, சுற்றாடல் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். இருப்பினும், புதிதாக காட்டை அகற்றி பயிரிட எவ்வித அனுமதியும் இல்லை என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பொலன்னறுவை காட்டு யானை அச்சுறுத்தலுக்கு அதிகம் முகம்கொடுக்கும் மாவட்டமாகும். மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சினையைப் சரியாக விளங்கி, அகழிகள் மற்றும் மின்சார வேலிகள் அமைத்தல் ஆகிய இரண்டையும் நிரந்தர தீர்வாக அமுல்படுத்தவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் பல பாடசாலைகளில் அபிவிருத்தி பணிகள் முடங்கியுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மக்கள் சுட்டிக்காட்டினர். நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி பணிகளையும் விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

நேற்று (16) முற்பகல் பொலன்னறுவை மெதிரிகிரிய, வெடிகச்சிய கிராமத்தில் நடைபெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இந்த தீர்மானங்களை எடுத்தார். ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தின் ஆறாவது நிகழ்ச்சி இதுவாகும்.

இந்த திட்டம் 2020 செப்டம்பர் 25 ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய ஐந்து நிகழ்ச்சிகள் இது வரை நடைபெற்றுள்ளன.

இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தூரப் பிரதேச கிராம மக்களை ஜனாதிபதி சந்தித்து உடனடியாக அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து விசாரித்து தீர்வுகளை வழங்குவதற்காக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார். விரைவாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதுடன், தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் தீர்க்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்பட்டது.

பொலன்னறுவை நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ள மெதிரிகிரிய பிரதேச செயலகப் பிரிவுக்கு சொந்தமான வெடிகச்சிய கிராமம் மகாவலி அபவிருத்தித் திட்டத்தின் “டி” வலயத்தைச் சேர்ந்தது. இது சமகிபுர, தர்ஷனபுர, தஹம்வெவ மற்றும் பேரமடுவ கிராமங்களை உள்ளடக்கிய இதன் பரப்பளவு 79 சதுர கி.மீ ஆகும். 723 குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமத்தின் மக்கள் தொகை 2561 ஆகும். வெடிகச்சிய உட்பட சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் சுயதொழில் ஆகும். பயிர்ச்செய்கைக்கான தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெரும் போகத்தில் மட்டுமே பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டிள்ளமை கிராம மக்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சினையாகும். எனவே, அவர்கள் சிறு போகத்தின் போது கிராமத்தை விட்டு வெளியேறி, ஏதேனும் கூலித் தொழிலில் ஈடுபட வேண்டியுள்ளது.

அத்தியாவசிய வசதிகள் கூட இல்லாத வெடிகச்சிய கிராமத்தில் தற்போதுள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். கிராம மக்கள் நீண்ட காலமாக முகம் கொடுக்கும் விவசாய பிரச்சினைக்கு தீர்வாக கால்வாய்கள் மற்றும் குளங்களை புனரமைப்பதற்கும், இரு போகங்களுக்கும் நீரை வழங்குவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட அரசியல் அதிகார தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மெதிரிகிரிய – வடதாகை பகுதியில் பயிர்களுக்கு மான்களினால் ஏற்படும் சேதத்தையும் மக்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு தீர்வாக, மான்கள் வாழும் வனப்பகுதியைச் சுற்றி வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு நிதி ஏற்பாடுகளை வழங்க வட மத்திய மாகாண ஆளுநர் மகீபால ஹேரத் இணக்கம் தெரிவித்தார்.

க.பொ.த (உ / த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்த துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சருக்கு அறிவித்து தொழில் பயிற்சி வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதேசத்தின் குடிநீர் தேவைகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார். கவுதுல்ல குளத்திற்கு அருகே நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைத்து, 10,000 குடும்பங்களுக்கு நீர் வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தை 2021 இறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மின்சார கட்டணங்களை செலுத்த முடியாத பாடசாலைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு “சூரிய மின் சக்தி முறைமையை” இலவசமாக வழங்குமாறு ஜனாதிபதி மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், பல பிரதான மற்றும் சிறிய வீதிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உத்தரவிடப்பட்டது.

´கிராமத்துடன் உரையாடல்´ திட்டத்திற்கு இணையாக மெதிரிகிரியவில் உள்ள பிசோபுர மகாவலி ஆரம்பப் பாடசாலை திறப்பு விழாவிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். இப்பாடசாலையை நிர்மாணிப்பதற்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி அதனை திறந்து வைக்க அழைத்தார்.

ஸ்ரீ லங்கா டெலிகொம், மொபிடெல் நிறுவனம் நன்கொடையளித்த இரண்டு கணினிகளையும், டயலொக் நிறுவனம் நன்கொடையளித்த தொலைக்காட்சியையும் ஜனாதிபதி அதிபரிடம் வழங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இராஜாங்க அமைச்சர்கள் ரொஷான் ரணசிங்க, சிரிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல, வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனத் தலைவர்கள் இந்த ´கிராமத்துடன் உரையாடல்´ நிகழ்ச்சியில் கலந்தாகொண்டனர்.