தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 35பேர் கைது

376 0

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் குறித்த 35 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக்கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்ட விதிகளைப் பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு தனிமைப் படுத்தப்பட்ட சட்ட விதிகளைப் பின்பற்றத் தவறிய 213 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மேல் மாகாணத்தில்அடையாளம் காணப்பட்டன.

எனவே இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.