தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஒரே நாளில் அதிக சரக்கு பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை

289 0

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் அதிக சரக்கு பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்து உள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு 260.05 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மபுத்ரா என்ற சரக்கு கப்பல் கடந்த 8-ந் தேதி வந்தடைந்தது. இந்த கப்பல் தூத்துக்குடி- காண்ட்லா- பிபாவவ்-கொச்சி-தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களுக்கு இடையே சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சரக்கு பெட்டக கப்பலில் இருந்து ஒரே நாளில் 4 ஆயிரத்து 413 சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் 3979 சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டு இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 25 சரக்கு பெட்டகங்கள் வீதம் கையாளப்பட்டு உள்ளது.

உலகளவில் கொரோனா தொற்றால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டின் 3-வது கால் இறுதியின் போது, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் மூலம் சரக்கு பெட்டகங்கள் 11 சதவிகிதம் குறைவாக கையாளப்பட்டது. கொரோனா தொற்றின் காரணமாக உலகளாவிய தொழில் துறை வர்த்தகத்தில் நம்பிக்கை ஏற்படும் வகையில் அக்டோபர் 2020 முதல் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளின் அளவு மெதுவாக அதிகரிக்ககூடிய அறிகுறிகள் தென்படுகிறது. தற்போது காலியான சரக்கு பெட்டகங்களின் பற்றாக்குறை இல்லாமல் சீரான நிலை உள்ளதால் வரக்கூடிய மாதங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வாயிலாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.