வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி;முறையான விசாரணை கோரும் கிராம மக்கள்

276 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 11வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியகல்லாறு 2ஆம் குறிச்சி, நாவலர் வீதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப் பட்டுள்ளது. சிறுமியின் தாயார் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு தொழிலுக்காகச் சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி சிறிய தாயின் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமியின் அம்மம்மாவின் வீட்டில் இருந்தபோது குறித்த சிறுமி தாக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை முன்தினம் சிறுமி கிராம சேவகரால் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இதன்போது சனிக்கிழமை வைத்தியசாலையில் இருந்த சிறுமியை, சிறுமியின் சிறிய தாயார் அழைத்துச்சென்ற நிலையில் காலை சிறுமி குறித்த சிறிய தாயின் வீட்டில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்தச் சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இந்தச் சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை கிராம சேவையாளர், சிறுவர் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் முன்னிலையில் கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறிய தாயிடம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டார் என்ற சந்தேகத்தை பிரதேச மக்கள் எழுப்பியுள்ளனர்.

இந்தச் சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுகின்ற நிலையில் அதிகாரிகள் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்டகாலமாக கொழும்பில் சிறிய தாயுடன் இருந்து வந்த நிலையில் குறித்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இந்தச் சிறுமிக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.