அமெரிக்க பாராளுமன்ற வன்முறை: 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

251 0

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டிடத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.

அப்போது அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வழிமுறைகளை கையாண்டனர்.இந்த வன்முறை சம்பவத்தில் போலீஸ் உள்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்க வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் வலைதள பக்கங்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டன.

இதற்கிடையில், பாராளுமன்ற கட்டிட வன்முறை தொடர்பாக சமூகவலைதளமான டுவிட்டரில் பல்வேறு கருத்துக்கள், வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன. அந்த பதிவுகளை நீக்கும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
கோப்பு படம்

 

இந்நிலையில், பாராளுமன்ற கட்டிட வன்முறை தொடர்பான கருத்துக்களை பதிவிட்டதாக 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்துக்கள், வீடியோக்களை டுவிட்டர் தளத்தில் பதிவு செய்யப்படதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம்

தெரிவித்துள்ளது.