சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 8700 கிலோ உலர் மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கடற்படையின் வடமேற்கு கட்டளையகத்தினால் அண்மையில் வடமேற்கு கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 8,700 கிலோவுக்கும் அதிகமான உலர் மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன் அதனை கடத்த முற்பட்ட 12 வெளிநாட்டு பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடமேற்கு கடல் பிராந்தியத்தில் சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகளின் நடமாட்டத்தை ஜனவரி 08ம் திகதி அவதானித்த கடற்படை கட்டளையகம் அந்த படகுகளை சோதனைக்குட்படுத்தியது. இந்த சோதனையின் போது 173 சாக்குகளில் கடத்தப்பட்ட உலர்ந்த மஞ்சளே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட மஞ்சளுடன் 19 முதல் 70 வயதுகளை கொண்ட 12 வெளிநாட்டு பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர். அத்தோடு அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கொவிட்-19 ஐ த் தடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டன.
கைப்பற்றப்பட்ட உலர் மஞ்சள் மற்றும் கைது செய்யப்பட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட படகுகள், விசாரணைக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.