செங்கைஆழியான் என அழைக்கப்பட்ட அமரர் கலாநிதி குணராசா நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் என கலாநிதி மனோன்மணி சன்முகதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தினால் கலைஞர்களுக்கான கலைஞானச்சுடர் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் அரங்கத் திறப்புரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
ஐம்பதிற்கும் மேற்பட்ட நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கல்விசார் நூல்களையும் எழுதி தமிழ் மொழிக்கு அளப்பரிய பணியாற்றிய ஒருவர் என்றும் கலாநிதி மனோன்மணி சன்முகதாஸ் குறிப்பிட்டார்.
நல்லூர் பிரதேச செயலர் ஆள்வாப்பிள்ளை சிறி தலைமையில் நடைபெற்ற கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் வரவேற்புரையினை நல்லூர் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலர் பி.அஜிதா வழங்கினார்.
வரவேற்பு நடனத்தினை நல்லூர் சிவநர்த்தனாலய மாணவிகள் நிகழ்த்தினர். நிகழ்வில் திருநெல்வேலி சிவயோகர் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் வில்லிசை, கந்தர்மடம் நர்த்தன ஷோத்திரா மன்ற மாணவிகளின் நாட்டிய நாடகம், ஜெ.மஞ்சுசீதா குழுவினரின் வாத்திய பிருந்தா மற்றும் அரியாலை வே.தூயகுமாரன் குழுவினரின் நாட்டார் பாடல்கள் ஆகிய கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் உதவிப் பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம், சிறப்பு விருந்தினராக நல்லூர் கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.நிசாந்தன், கௌரவ விருந்தினராக நாடக கலைஞர் தம்பு சிவலிங்கம், கலைஞர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.