கழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருகிற 16-ந் தேதி உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்த போட்டியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடும் விழா நேற்று நடந்தது.
இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, ‘ஜல்லிக்கட்டில் பங்கு பெறும் காளைகளுக்கு அனுமதி வழங்குவதில் விழா குழுவினர் பாரபட்சமன்றி செயல்பட வேண்டும். வாடிவாசல் முதல் காளைகள் பரிசோதனை செய்யும் இடம் வரை தடுப்புகள் அமைக்கப்படும்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளும் போது முக கவசம் அணிந்து வர வேண்டும்’ என்று கூறினார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்-அமைச்சர் பெயரில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு கார் பரிசாக வழங்கப்படுகிறது. துணை முதல்-அமைச்சர் சார்பில் சிறந்த காளைக்கு ஒரு கார் பரிசாக அளிக்கப்படுகிறது. பங்கு பெறும் அனைத்து காளைகளுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. மேலும் போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு பீரோ, கட்டில், தங்க மோதிரம் என பல்வேறு பரிசுகள் காத்திருக்கின்றன.