அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பா.ஜனதா துணைத் தலைவர் அண்ணாமலை காரமடையில் சமுதாய தலைவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் எந்தவித குழப்பமும் கிடையாது. எங்கள் கூட்டணி ஒரே நேர் கோட்டு பாதையில் பயணித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் தி.மு.கவுக்கு ஆட்சி செய்யும் பொறுப்பை வழங்கவில்லை.
இனி வரும் 5 ஆண்டுகளும் தி.மு.க.வுக்கு மக்கள் ஆட்சி செய்யும் வாய்ப்பை வழங்க மாட்டார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் நடத்துவது மக்கள் கிராமசபை கூட்டம் கிடையாது. அது தி.மு.க தொண்டர்களின் கூட்டம்.
உதயநிதி ஸ்டாலின் தான் செல்லும் கூட்டங்களில் எல்லாம் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் பேசி கொண்டிருக்கிறார். அது கைத்தட்டலை வேண்டும் என்றால் வாங்கி தரும். ஆனால் அந்த கைத்தட்டல்கள் அனைத்தும் வாக்காக மாறாது என்பது அவருக்கு தேர்தலின் முடிவில் புரியும்.
வேல் யாத்திரைக்கு பிறகு 8½ லட்சம் பேர் வேல் பூஜை செய்துள்ளனர். இது பொறுக்க முடியாமல் தான் திருமாவளவன் இந்து தெய்வங்கள் குறித்து அவதூறு பேசி வருகிறார். வருகிற தேர்தலில் இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.