கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, அனைத்து பாடசாலைகளையும் ஒரே நேரத்தில் மீண்டும் திறப்பது கடும் ஆபத்திற்கு வழிவகுக்கும் எனக் கூறினார்.
மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதேவேளை அனைத்து பாடசாலைகளுக்கும் சுகாதார வசதிகள் வழங்கப்படவில்லை என்றும், அவற்றினைப் பெறுவதற்கான நிதி பாடசாலைகளிடம் இல்லை என்றும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம், நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக சித்தரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவது மாணவர்களே என்றும் குறிப்பிட்டார்.