வடக்கு கிழக்கு உட்பட நான்கு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

221 0

வடக்கு, கிழக்கு, வட-மத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் இன்றையதினம் 150 மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் ஏனைய இடங்களில் 100 மிமீக்கு மேல் கனமழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு அருகிலுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவின் பெரும்பாலான பகுதிகளில் பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில நேரங்களில் காற்றின் வேகம் (40-50) கி.மீ.அளவில் வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழைநேரங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.