வடக்கில் மாத்திரம் ஏன் நினைவு தூபி அமைக்க முடியாது? – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

242 0

வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலுள்ள பல பல்கலைகழகங்களிலும் நினைவு சின்னங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றேனும் இதுவரையில் அப்புறப்படுத்தப்படவில்லை. அவ்வாறிருக்கையில் வடக்கில் மாத்திரம் ஏன் நினைவு தூபி அமைக்க முடியாது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில், “பல்கலைக்கழக மாணவர்கள் தமது எண்ணத்திற்கு அமைய நினைவு சின்னங்களை அமைக்கின்றனர். தெற்கிலுள்ள பல பல்கலைக்கழங்களிலும் இதேபோன்று வேறு பல நினைவு சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுகூட இது வரையில் இவ்வாறு உடைத்து தகர்த்தப்படவில்லை.

இறுதிகட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பேரவலத்தினை நினைவுகூரும் முகமாகவே மாணவர்களால் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்து இரண்டு ஆண்டுகளாகவே அந்த நினைவு தூபி அங்கு இருக்கிறது. அவ்வாறிருக்கையில் மிகவும் அவசரமாக அதனை அங்கிருந்து அகற்றுவதற்கான நோக்கம் என்ன?

தெற்கில் இதுபோன்று நினைவு தூபிகளை அமைக்க முடியும் என்றால் ஏன் வடக்கில் மாத்திரம் அமைக்க முடியாது? இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற ரீதியில் நாம் இதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுகின்றோம்” என மேலும் தெரிவித்தார்.