கிளிநொச்சியில் தொடரும் மழை – வெள்ள எச்சரிக்கை

242 0

கிளிநொச்சியில் பெய்து வரும் தொடர் மழையால் குளங்கள் வான் பாய்கிறதுடன், வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணி வாசிப்பின் பிரகாரம் கிளிநொச்சி நீர்பாசன குளங்கள் மீண்டும் வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரணைமடு குளம் 3′ வான் பாய்வதுடன் 4 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. 2 கதவுகள் 1 அடியாகவும் ஏனைய இரு கதவுகள் 6 அங்குலமாகவும் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக நீர் வருகை காரணமாக இரவு 6 வான் கதவுகள் திறந்து விடப்பட்டதாகவும் அதில் இரண்டு பூட்டப்பட்டுள்தாகவும் குறிப்பிடும் நீர்பாசன திணைக்களம், நீர் வரத்து அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் மேலும் கதவுகள் திறக்கப்படலாம் எனவும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, பரந்தன், உமையாள்புரம் உள்ளிட்ட தாழ்வு நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை கல்மடு குளம் 2 அங்குலமும் பிரமந்தனாறு குளம் 2 அங்குலமும் கனகாம்பிகை 3 அங்குலமும் அக்கராயன்குளம் 1 அங்குலமும் கரியாலை நாகபடுவான் குளம் 3 அங்குலமும் புதுமுறிப்பு குளம் 1 அங்குலமும் குடமுருட்டிகுளம் 3 அங்குலமும் வன்னேரிக்குளம் 1 அங்குலமும் வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த குளங்களின் கீழ் உள்ள பகுதிகளுக்கு வெள்ள முன்னெச்சரிக்கையும் விடுத்துள்ளது.

வெள்ள அனர்த்த பகுதிகளாக காணப்படும் பொன்னகர், கனகாம்பிகை குளம், ஆனந்தபுரம் கிழக்கு, இரத்தினபுரம், பிரமந்தனாறு, தர்மபுரம், உழவனூர், பெரியகுளம், கல்லாறு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான வசந்தநகர், முறிகண்டி, செல்வபுரம் பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர், படையினர் மற்றும் பொலிஸாரின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.