முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அனந்தி சசிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்.பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவில் இடித்து அழிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் மனங்களையும் காயப்படுத்தி இருக்கின்றது.
யாழ்.பல்கலைக்கழமானது சுயாதீனமான சுயநிர்ணயத்துடன் கூடிய அமைப்பாகதான் இருந்து இருக்கின்றது.
எனவே இந்த இடத்தில் அங்கீகாரம் இல்லாத கட்டடம் அழிக்கப்பட்டது என்று துணைவேந்தர் கூறியுள்ள கருத்தை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
யாழ்.பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இறுதி யுத்தத்தில் எத்தனையோ மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
அத்துடன் முள்ளவாய்க்காலில் குடும்பம் குடும்பமாக கூட கொல்லப்பட்டார்கள். இன்று அவர்களின் உறவுகள் இங்கு கல்வி பயிலுகின்றார்கள்.
இந்நிலையில் தங்களது உறவுகளை நினைவு கூறுவதற்கு யாழ்.பல்கலைக்கழத்தில் இந்த நினைவுத் தூபியை கட்டியிருந்தார்கள். குறித்த நினைவுத் தூபி, அவர்களின் மனங்களில் இருக்கின்ற காயங்களை ஆற்றுப்படுத்துகைக்கு கொண்டு வந்திருக்கும்.
இவ்வாறு அவர்களின் நினைவு கூரலுக்கு கூட அங்கீகாரம் வழங்காதமை கண்டனத்துக்குரிய விடயமாகும். ஆகவே, உலக நாடுகளும் இவ்விடயத்திற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.