ஜெனிவா விவகாரத்தில் சரியான திசை நோக்கி நாம் நகர்வதாக நம்புகின்றோம்- சுரேஸ்

209 0

ஜெனிவா விடயங்களை கையாள்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடல் சரியான திசை நோக்கி செல்லும் என நம்புகின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஜெனிவா விடயங்களை கையாள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கான கலந்துரையாடலின் நிறைவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களு்ம மத பெரியார்களை உள்ளடக்கிய ஒரு கருத்து பரிமாற்றம்  கூட்டத்தில் இடம்பெற்றது.

முக்கியமாக எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணையகத்தினுடைய கூட்டத்தொடர் சம்பந்தமாகவும் அதில் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள நாங்கள் எவ்வாறு அதனை கையாள்வது என்பது தொடர்பாக கருத்து பரிமாற்றம் செய்திருக்கின்றோம்.

ஒரு பொது உடன்பாட்டை நாங்கள் ஏறத்தாழ எட்டியிருக்கின்றோம். அது தொடர்பாக ஒரு ஆவணம் தயாரிக்கப்படுகின்றது. அந்த ஆவணம் இதில் கலந்து கொண்ட கட்சிகளிற்கும் ஏனைய சிவில் அமைப்புக்களிற்கும் அனுப்பப்படும். அந்த ஆவணத்தில் வரக்கூடிய கருத்துக்கள்,அதனை பார்த்த பரிசீலித்து, அது தொடர்பில் பொது முடிவு ஒன்றை நாங்கள் எட்டுவோம் என்று நம்புகின்றோம்.

ஏற்கனவே ஒரு நீண்ட கருத்து பரிமாற்றங்கள் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே இது ஓரளவிற்கு சரியான திசை நோக்கி செல்லும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.