பறவை காய்ச்சல் பீதியால் சென்னையில் கோழிக்கறி விற்பனை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கேரளா, இமாச்சல பிரதேசம் உள்படசில மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது இதனால் கோழி மற்றும் வாத்து இறைச்சி சாப்பிடுபவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு மட்டும் தினமும் 2 கோடி முட்டைகள் அனுப்பப்படும். தற்போது பறவை காய்ச்சல் பீதியால் முட்டை சப்ளை பாதித்துள்ளது. இதனால் விலையும் 50 காசுகள் குறைந்துள்ளது.
கோழிக்கறி விற்பனையும் சரிந்து வருகிறது தென்னிந்தியாவில் மிகப் பெரிய கோழி மார்க்கெட் சென்னைதான்.
சென்னையில் கோழிக்கறி விற்பனை 20 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டதாக மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் சுரேஷ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள் உள்ளன. தினமும் சராசரியாக 500 லாரியில் கோழிகள் வரும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை இரட்டிப்பாக இருக்கும். ஆனால் இன்று விற்பனை மிகவும் குறைவு.
பறவை காய்ச்சல் பீதியால் தான் மக்கள் கோழிக்கறி சாப்பிட தயங்குகிறார்கள். இதேபோல் தெலுங்கானா மாநிலத்திலும் மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. அந்த மாநில அரசு கோழிக்கறி சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் வராது என்று மக்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதேபோல் தமிழகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால்தான் பீதி அகலும். கோழிக்கறி விற்பனை சரிவை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.