யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியவை வருமாறு,
” யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்-நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்து விட்டு அரசின் ஏவுதலின் பேரில் ராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். இது கொடுமையிலும் கொடுமை ஆகும்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்த அராஜகத்தை இலங்கை அரசு செய்துள்ளது. இந்திய அரசு, இலங்கை அரசுடன் கொஞ்சிக் குலாவுவதால் நாம் என்ன செய்தாலும் உலகத்தில் கேள்வி கேட்பார் யார்? என்ற மமதையும், திமிரும் தலைக்கு ஏறி உள்ளது.
சுதந்திரத் தமிழ் ஈழத்திற்குத் தீர்மானம் போட்ட அ.தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது?
யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் நினைவு முற்றமும் நினைவுத் தூணும் அமைக்கப்பட வேண்டும். இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீரத் தமிழர்கள் தீக்குளித்து மாண்டனரே, அந்த நெருப்பு நம்முடைய நெஞ்சிலே பற்றட்டும்.
நெஞ்சை பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11-ந் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், கழகக் கண்மணிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியனவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.