யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பு அரசின் தூர நோக்குக் கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரலாகும் என தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது.
தமிழர் மரபுரிமைப் பேரவையின் ஊடகப் பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், ‘சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி, பல்கலைக்கழக நிர்வாகம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை ஜனவரி 8ம் திகதி இரவோடிரவாக இடித்து அழித்துள்ளது”.
பின்முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுத் தளத்தில் சிங்கள அரசியல் சொல்லாடலை பயங்கரவாதத்தின் மீதான வெற்றி என்று கூறி தமிழினப் படுகொலையை மறுத்து வந்துள்ளது.
இன்று பதினொரு வருடங்கள் முடிந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அகற்றுவதென்பது அரசின் ஒத்த அரசியல் சொல்லாடலை தக்க வைப்பதோடு கட்டமைக்கப்பட்ட இனபப்டுகொலையை தொடரவ்துமாகும்.
தமிழினப் படுகொலை சொல்லாடலை அரசு மிகத்திட்டமிட்டு தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் அகற்றி வருவது என்பது சிங்கள – பௌத்த அரசின் தூர நோக்குக் கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.
தமிழினப் படுகொலையில் இறந்த மக்களை நினைவு கூருவது தமிழ் மக்களின் கூட்டுரிமை சார்ந்தது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்கு சிங்கள – பௌதத் அரசு வருடாவருடம் முயன்று வந்தது தமிழினம் அறிந்த வரலாறு.
தமிழினப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு அரசியல் வெளியை நிராகரித்து, சிங்கள அரசு நல்லிணக்கத்தை, சமாதானத்தை முன்னெடுப்பது அபத்தமும், முரண்பாட்டுத் தன்மை கொண்டதுமாகும்.
பதினொரு வருடங்கள் கழிந்த நிலையிலும் உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு தயாரற்ற நிலையில் உள்ள அரசின் நிலைப்பாடு, சிறிலங்கா சிங்கள – பௌத்தர்களுக்கானது என்ற பேரினவாத அடிபப்டைவாத மகாவம்ச மனநிலையில் முதலீடு செய்கின்றதோடல்லாமல் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கை தமிழ்த் தேசிய நீக்கம் செய்கின்றது.
தமிழினத்தின் மீதான ஆக்கிரமிப்பிற்கெதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையை பிரதிபலிக்கின்ற, பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிறுவனமாக இருந்து வந்துள்ளதென்பது, கல்விக்கும் யதார்த்தத்திற்குமிடையேயுள்ள உறவை புரிந்து வந்துள்ள பண்பாட்டை யாழ்.பல்கலைக்கழகம் பாரம்பரியமாகக் கொண்டது.
தமிழின ஆக்கிரமிப்பிற்கெதிரான, தமிழின விடுதலை சார்ந்து சிந்திக்கின்ற பாரம்பரியத்தை தாயகத்தில் தக்க வைத்தக் கொள்கின்ற நிறுவனமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழம் விளங்கி வருகின்றது.
இந்த நிறுவனத்தை தமிழ்த் தேசிய நீக்கம் செய்கின்ற நடவடிக்கைகளை சிங்கள – பௌத்த அரசு செய்து வருவதென்பது தெரியாத விடயமுமல்ல.
ஆனால் நேற்று நடந்தேறிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பென்பது வன்மையாகக் கண்டிக்கப்படுவதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழம் கொண்டிருக்கின்ற தமிழின விடுதலை சார்ந்த பண்புகளை தமிழ்த் தேசிய அடையாள நீக்கம் செய்வதாகும்.
இச்சூழமைவில்தான் முன்னாள் துணைவேந்தரின் பதவி நீக்கமும், கலாநிதி.குருபரன் (சட்டத்துறை மேலாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) மீது பிரயோகிக்கப்பட்ட அரசியல் அழுத்தத்தையும் உற்று நோக்க வேண்டியிருக்கும்.
மிக அண்மையில், தற்போதைய பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வட மாகாண ஆளுநர் கலாநிதி.சுரேன் ராகவன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.
கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் முன் கொணரப்பட்ட ‘தமிழினப்படுகொலை வாரம், சட்டவரைபு மூலம் சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும். அது முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்ததை முக்கியத்துவம் அற்றது அல்ல என நிராகரித்து விட முடியாது.
சிங்கள – பௌதத் ஏகாதிபத்திய அரசு தமிழினத்தை அடக்குமுறைக்குள்ளாக்குவதற்கு கல்வி நிறுவனங்களையும், தனக்குட்பட்ட ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையும் பயன்படுத்துகின்றது – அரசு, இயந்திர நிகழ்ச்சி நிரல்களிலிருந்து அதற்கான நியமனங்கள் வரை- என்பது மிகத்தெளிவாக உணர்த்தப்பட்டுவிட்டது.
வெவ்வேறு அரச திணைக்களங்களுக்கூடாக, தொல்லியல், வனவளத்துறை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தமிழ் நிலங்களையும் தமிழ் மரபுரிமைச் சின்னங்களையும் இல்லாதொழிப்பது அல்லது திரிவுபடுத்துவது என்கின்ற அரசியல் நிகழ்ச்சி நிரலை, ஆயுதமற்ற போராக வடக்கு – கிழக்கில் ஒட்டுமொத்த தமிழினம் மீது சிங்கள – பௌத்த அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
2009க்குப் பின்னர் ஆயுதமற்ற போரை வடக்கு – கிழக்கில் கட்டவிழ்த்த சிங்கள – பௌத்த அரசு தொடரந்தும் தமிழினத்தை அடக்கு முறைக்குள் வைத்துக் கொண்டு சிங்கள – பௌத்த ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தி தமிழினத்தின் கூட்டுரிமைகளை ஈழத்தமிழ் அடையாளம் சார்ந்து மறுத்து, நிராகரித்து, மீறி வருவதென்பது சிங்கள – பௌத்த அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலிலிருந்து மாறவில்லை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
ஒட்டுமொத்த தமிழினமும் கூட்டாக சிங்கள – பௌத்த அடக்குமுறைக்கெதிராக எழுச்சி கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றது. அவ்வரலாற்றுக் கடமை எம் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.