முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இராணுவப் பாதுகாப்புடன் நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் பல்கலைக்கழகப் பகுதியில் இராணுவத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் உடனடியாக இராணுவம் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அவர்கள் மீதான படுகொலைகள் போன்றவற்றின் நினைவுகளை முழுமையாக அகற்றிவிட வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அதன் ஒரு அங்கமாகவே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிர்மூலமாக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் மிகவும் ஆபத்தான வேலைத் திட்டங்களில் இதுவும் ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கை ஆனது தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டி நசுக்குவதற்கு ஒப்பானது என்றும் இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஒருபோதும் நல்லெண்ணத்தை ஏற்படுத்திவிட முடியாது என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இதுவரை காலமும் இந்த நினைவுத் தூபியை அகற்றுவதற்கு பல்கலைக்கழகத்தின் முன்னைய இரண்டு நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.