தென் மாகாணத்தில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15,000 ஏக்கர் காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகையின் கீழ் தர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷமன் கிரியல்ல நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக அந்த துறைமுகத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியார்மயப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி்யும் அந்த துறைமுகத்தின் ஊழியர்கள் கடந்த 07ம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல, ஜனாதிபதி மற்றும் சீனா அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள 15,000 ஏக்கர் காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகையின் கீழ் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்தது என்று அறிவித்தார்.
இதன்படி சனதா பிரதேசத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்.
இதனை ஹம்பாந்தோட்டை மக்கள் எதிர்ப்பதாக போலியான பிரச்சாரங்களை நடப்பதால் இந்த வேலை நிறுத்தம் நடைபெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் லக்ஷமன் கிரியல்ல இந்த சூழ்ச்சியின் பின்னணியில் கூட்டு எதிர்க்கட்சி இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.