முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சைக்கு தோற்றலாம்

303 0

516740844akiliaநாவலப்பிட்டிய புனித மேரி பரீட்சை நிலையத்தில் கடந்த தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தேடிப்பார்த்து அறிக்கை சமர்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.என்.ஜே. புஷ்பகுமாரவிற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் மாணவிகள் சிலருக்கு புனித மேரி பரீட்சை நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரிடம் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் விளக்கம் கோரியுள்ளதுடன், பரீட்சை சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

அத்துடன் பரீட்சைக்கு சமூகமளிக்கும் முஸ்லிம் மாணவிகளின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்காத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் பர்தா அணிந்து வருகின்ற முஸ்லிம் மாணவிகளை, பெண் உத்தியோகத்தர்களை கொண்டு பரீட்சை நிலையங்களில் ஆள் அடையாளத்தை உறுதி செய்யுமாறும் கூறியுள்ளார்.

அதேபோன்று முஸ்லிம் மாணவிகளும் தமது அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்காக பரீட்சை நிலைய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதேவேளை இந்த சம்பவங்களை இனவாத, மதவாத செயற்பாடுகளுக்கு உபயோகப்படுத்துவது வருத்தப்படக் கூடிய விடயம் என்றும் கல்வியமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரீட்சை சட்ட திட்டங்கள் பொதுவானவை என்றும் எந்தவொரு நபருக்கும் விஷேட சலுகைகள் இல்லை என்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.