ஜனவரி 11-ந் தேதி வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க உத்தரவு

210 0

தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வருகிற ஜனவரி 11-ந் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இதே நிலை நீடித்து வந்த நிலையில், இதை 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு ஆதரவு இருந்தாலும், எதிர்ப்பு குரல்களும் தொடர்ந்து எழுந்து வந்தன.
தமிழக அரசின் அரசாணையை கண்டித்து மத்திய அரசு நேற்று கடிதம் எழுதியது. அதில் “50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமலுக்கு கொண்டு வரும் வகையிலான உத்தரவை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்திருந்தனர். 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்பது பேரிடர் விதிக்கு எதிரானது. 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவக் குழு அனுமதி தரவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 11-ந் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும் என நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள், 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் சூழலில் திரையரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்துவது பற்றியும் தகவல் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.