மட்டக்களப்பு ஏறாவூர்ப்பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் நேற்று(புதன்கிழமை) கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நேற்று முந்தினம் காலை ஏறாவூர் பகுதியில் தொலைதொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த தனியார் ஊடகமொன்றில் கடமைபுரியும் ஊடகவியலாளர் குகராசு சுபோஜனை சம்பவ இடத்திற்கு வந்த சிலர் அச்சுறுத்தி வீடியோ எடுக்க விடாது தடுத்ததுடன். ஊடகவியலாளரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.
அத்துடன் அவரிடம் இருந்த வீடியோ கருவியை பறிப்பதற்கு பல தடவைகள் முயற்சி செய்துள்ளனர்.
குறித்த ஊடகவியலாளரை சுற்றிவளைத்த குழுவினரிடம் தன்னை ஊடகவியலாளர் என்று அடையாளப்படுத்திய போது ஊடகவியலாளர் என்றால் எங்களுக்கு என்ன? உடனடியாக வீடியோவை அழிக்குமாறும் கூறி, கடுமையாக எச்சரித்து ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்துவதற்கு முயறசித்ததோடு வீடியோ கருவியை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.
இதனால் பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர் குறித்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக அகன்று சென்றுள்ளார்.
மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில் குறித்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான ஊடக அடக்குமுறை இதுவாகும்.
எனவே ஊடகவியலாளரை அச்சுறுத்திய குறித்த குழுவினரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்ய வேண்டும் என ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.