சடலங்களை தகனம் செய்வது குறித்த வர்த்தமானியினை இரத்து செய்யுங்கள் – அதாவுல்லா

247 0

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரை தகனம் செய்யவேண்டுமென வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது. ஆகையால், அதை இரத்துச் செய்யவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்கிற பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எனவே, இதை அரசியல் ரீதியாக அணுகாது, நிபுணர்கள் குழுவின் அறிக்கையின்படி இதைக் கையாள வேண்டுமென ஜனாதிபதி, பிரதமர் தீர்மானித்திருந்தனர்.

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இதனை ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிங்கள மக்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தில் அடக்கம் செய்ய முடியுமென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டாது, கொரோனா வைரஸால் உயிரிழப்போரை எரிக்க வேண்டுமென வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமையானது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஏமாற்றியா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் சட்டத்துக்கும், நாடாளுமன்ற கலாசாரத்துக்கும் எதிரானது என்பதால், அதனை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.