வடமாகாண சபை குறித்த நீதியமைச்சரின் கருத்துக்களை நிராகரித்தார் முதலமைச்சர்

297 0

cv-wigneswaranவடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பௌத்தர்கள் வாழாத இடத்தில், சட்டவிரோதமான முறையில் பலாத்காரமாக புத்தர் சிலைகளைத் தனியார் காணிகளில் இராணுவத்தினரின் துணையுடன் அமைப்பதையே வடமாகாண சபை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போடுவதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “புத்தர் சிலையென்ன, இந்துத் தெய்வங்களின் சிலையென்ன, கிறிஸ்தவர்களின் சிலை என்ன வேறெந்த மதத்தவர் சிலையென்றாலும் சட்டப்படி அமைப்பதை தடுக்க மாட்டோம்.  எனினும் தான்தோன்றித்தனமாக அமைத்தால் அதற்கு எங்கள் ஆட்சேபணையைத் தெரிவிக்க தயங்கவும் மாட்டோம்.

அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் கூற்றுக்கள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஆத்திரமூட்டியுள்ளன.  இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டார்கள், ஆலயங்கள் எவ்வாறு சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன, அதன் பின்னர் அவற்றுள் பெரும்பான்மையானவை மீளக் கட்டப்படவில்லை போன்ற விடயங்கள் தொடர்பில் விஜயதாச ராஜபக்ச அறியவில்லை.

இந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்ட காரணத்தினால் தெற்கில் இந்துக் கோயில்கள் கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் பௌத்தர் அல்லாதோர் வசிக்கும் இடங்களில் இராணுவத்தினரின் உதவியுடன் பௌத்த கோயில்களைத் தனியார் காணிகளில் கட்ட முற்படுவது ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கொள்ள வேண்டியுள்ளது.

அண்மையில் சிங்கள அகராதியின் ஆசிரியர் கலாநிதி அகுரடியே நந்தா தேரர் வேறு இரு பௌத்த பிக்குமார்களுடன் என்னை சந்தித்தனர். அவர்கள் பௌத்தர் இல்லாதோர் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதைத் கண்டிப்பதாக தெரிவித்தனர்.“ என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.