மருதனார்மடம் கடைத் தொகுதிகளை திறப்பதற்கான அனுமதி இன்னமும் எம்மால் வழங்கப்படவில்லை. நிலைமைகளைக் கவனத்திலெடுத்தே அதற்கு அனுமதி வழங்க முடியும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மருதனார்மடம் சந்தைக் கொத்தணி பரவலையடுத்து மூடப்பட்டுள்ள தமது வர்த்தக நிலையங்களை மீளத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மருதனார்மடம் சந்தைச் சூழலிலுள்ள வர்த்தகர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கேட்டபோதே பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.
மருதனார்மடம் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையதாக நேற்றும் (நேற்றுமுன்தினமும்) 7பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மருதனார்மடத்திலுள்ள வாகனச் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வந்து 4 மணி நேரம் நின்று சென்ற ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் எவ்வாறு வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதிக்க முடியும்?. மருதனார்மடக் கொத்தணி குறைவடைந்து இல்லாமல் போகும்போதே அனுமதிகளை வழங்கக் கூடியதாக இருக்கும். நாம் நிலைமைகளை அவதானித்து வருகின்றோம்.
அதற்கு அமைவாகவே கடைத் தொகுதியை திறப்பதற்கான அனுமதியை வழங்க முடியும் என்று சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்தார்.