தொழிலாளர்கள் விடயத்தில் ’அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்’

220 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று, இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (5) நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்படுமென பல வாக்குறுதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டப் போதிலும் இன்றளவும் அது நிறைவேற்றப்படவில்லை எனவும்   பெருந்தோட்ட தொழிலாளர்களும் இந்நாட்டின் பிரஜைகளே என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் ஒரு நாடு, ஓர் அரசாங்கம், ஒரு சடடம் இருக்குமேயானால், அரசாங்கம் தமது பொறுப்புகளைக் கம்பனிகளுக்கு வழங்கி வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில், தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்தேனும் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை மலையக மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.