ஈரோட்டில் குடிநீர் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஈரோடு மாநகராட்சியின் 2-ம் மண்டல அலுவலகம் பெரியசேமூரில் செயல்பட்டு வருகிறது. ஈரோடு ஈ.பி.பி.நகரை சேர்ந்த, பழைய கட்டிடங்களை இடிக்கும் தொழில் செய்யும் முரளி (வயது 38) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டி இந்த அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அவரது விண்ணப்பத்தை ஆய்வு செய்த மாநகராட்சி வரி வசூல் செய்யும் அலுவலராக பணியாற்றி வந்த ராசாம்பாளையத்தை சேர்ந்த செல்லத்துரை (43), முரளியிடம் குடிநீர் இணைப்பு கொடுக்க ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முரளி இதுபற்றி ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முரளியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனுப்பினர். பின்னர், முரளி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சி 2-ம் மண்டல அலுவலகத்தில் வரி வசூல் செய்யும் அலுவலகத்தில் இருந்த செல்லத்துரையிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
இதனை வாங்கி செல்லத்துரை பாக்கெட்டில் வைக்கும்போது, அங்கே சாதாரண உடையில் மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா, இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் தலைமையிலான போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து செல்லத்துரையை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை போலீசார் கைது செய்தனர். லஞ்சம் வாங்கியதில் உயர் அதிகாரிகளுக்கும், கீழ் நிலை பணியாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து செல்லத்துரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.