காலி முகத்திடல் நகர வன பூங்கா பொதுமக்களிடம் கையளிப்பு

215 0

 காலி முகத்திடலுக்கு முன்னால் உள்ள பாலதக்ஷ மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள நகர வன பூங்கா கடந்த 30 ஆம் திகதி பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது.

“சுபீட்சத்தின் நோக்கு“ நிகழ்ச்சித்திட்டத்தை யதார்த்தமாக்கும் வகையில் பொது மக்களின் ஓய்வு, மகிழ்வளிப்பை கருத்திற் கொண்டு நகர்ப்புற வன பூங்கா, நீர் பூங்கா மற்றும் நகர்ப்புற பசுமை உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட ஒரு அழகான நகர்ப்புற சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

கொழும்பு நகரத்தை பசுமை நகரமாக தெற்காசியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தலைநகரங்களில் ஒன்றாக மாற்றுவதும், நகர்ப்புற மக்களுக்கு சுற்றுச்சூழல் நட்பு நிலப்பரப்பை அனுபவிப்பதற்கு சந்தர்ப்பத்தை அளிப்பதும், பொருளாதார மதிப்பைச் சேர்ப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த பகுதியையும் காலி முகத்திடலையும் இணைத்து, புதிதாக அமைக்கப்பட்ட பாலதக்ஷ மாவத்தையின் ஊடாக உட்கட்டமைப்பு வசதி திட்டத்திற்கான ஒரு முன்மாதிரி திட்டமாக இது உருவாக்கப்பட்டது.

இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நகர வன பூங்கா மூன்று கட்டங்களை கொண்ட திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக செலவிடப்பட்ட தொகை 135 மில்லியன் ரூபாவாகும்.

2020 ஜூன் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் பணிகள் 2020 நவம்பர் 15 ஆம் திகதி நிறைவடைந்தன.

திட்ட வடிவமைப்பு, நில வடிவமைப்பு என்பன நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிரதான திட்ட ஒப்பந்தக்காரராக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் செயற்பட்டது.