உடல்களை புதைப்பதற்கு அனுமதியுங்கள்

204 0

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் இலங்கையின் சிவில் சமூக பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு மருத்துவதுறையை சார்ந்த அமைப்புகளும் தனிநபர்களும் அனுமதியளித்துள்ளதை வரவேற்பதாக இலங்கையின் சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அரசாங்கம் இந்த ஆலோசனையின் அடிப்படையில் செயற்படவேண்டும் கட்டாயமாக உடல்களை தகனம் செய்யும் கொள்கையை அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாட்டின் தலைசிறந்த தொற்றுநோயியல் நிபுணர்களும் மருத்துவ அமைப்புகளும் தற்போதுள்ள விஞ்ஞான தரவுகளின் அடிப்படையில் உடல்களை அடக்கம் செய்யலாம் என தெரிவித்துள்ள சிவில்சமூக பிரதிநிதிகள் ஜனவரி முதலாம் திகதி கொவிட்டினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என இலங்கையின் மருத்துவ சங்கம் அறிக்கையொன்றை விடுத்திருந்தது என தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 31 ம் திகதி இலங்கையின் சமூக மருத்துவ சங்கம் இதேபோன்றதொரு அறிக்கையை வெளியிட்டிருந்தது என சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகவும் பிரபலமான இலங்கையை சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் மலிக் பீரிஸ் மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் உடல்களை தகனம் செய்வது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேள்விக் குறிக்குள்ளாக்கியுள்ளனர் என சிவில் சமூகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான விதத்தில் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக அவர்கள் குரல்எழுப்பியுள்ளனர் எனவும் சிவில் சமூகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆணித்தரமான காத்திரமான மருத்துவ ஆலோசனை காரணமாக நாங்கள் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்குமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம் என சிவில் சமூக பிரதிநிதிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
போதிய விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் அற்ற நிலையில் உடல்களை தகனம்; செய்யும் கட்டாய கொள்கையை அரசாங்கம் பின்பற்றுவது சில இனக்குழுக்களிற்கு பெருந்துயரத்தையும் கவலையையும் அளித்துள்ளது என சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இதனை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மருத்துவதுறையில் உள்ள மதிக்கப்படும் இந்த நபர்கள் மற்றும் அமைப்புகளின் தெளிவான ஆலோசனைகளை செவிமடுத்து தங்கள் குடும்பத்தவர்களின் உடல்களை அடககம் செய்வதற்கு விரும்பும் மத சிறுபான்மையினத்தவர்கள் மற்றும் ஏனைய குழுக்களிற்கு எவ்வித தடையுமின்றி அதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என சிவில் சமூக பிரநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.