பாகிஸ்தானில் சுரங்க தொழிலாளர்கள் 11 பேர் சுட்டுக்கொலை

247 0

பாகிஸ்தானில் சுரங்க தொழிலாளர்கள் 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள மாக் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்குகிறது. உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை சுரங்க தொழிலாளர்கள் வழக்கம்போல் ஒரு வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் வேனை வழிமறித்து சுரங்கத் தொழிலாளர்கள் அனைவரையும் கடத்திச் சென்றனர்.

பின்னர் பலூசிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்களை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு மற்ற தொழிலாளர்களை அனுப்பி விட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த 11 தொழிலாளர்களை அங்கு உள்ள ஒரு மலை பகுதிக்கு அழைத்து சென்ற பயங்கரவாதிகள் அவர்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் பலூசிஸ்தானில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில் சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘11 அப்பாவி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பயங்கரவாதத்தின் மற்றொரு கோழைத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். இந்த கொலையாளிகளை கைது செய்து நீதிக்கு முன் கொண்டுவர தேவையான அனைத்தையும் செய்யுமாறு காவல் மற்றும் நீதித் துறையை கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தோடு அரசு துணை நிற்கும்’’ என தெரிவித்துள்ளார்.