ரூ.2500 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை உற்சாகமாக வாங்கி சென்ற பொதுமக்கள்

223 0

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்க பணத்தை பொதுமக்கள் உற்சாகமாக வாங்கி சென்றனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கி வைத்தார்.

இன்று முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இன்று தொடங்கியது.

அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த பரிசு தொகுப்பு கிடைக்கும். அதன்படி 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் ரூ.2,500 ரொக்கம் மற்றும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உருவம் பொறித்த துணிப்பை பொட்டலம் ஒன்று வழங்கப்பட்டது. அதற்குள் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, திராட்சை 20 கிராம், முந்திரி 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் ஆகிய பொங்கல் பொருட்கள் இடம் பெற்று இருந்தது. அத்துடன் முழு கரும்பு ஒன்றும் வழங்கப்பட்டது.

கொரோனா பரவல் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க பொங்கல் பரிசு விநியோக முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ரேசன் கார்டுதாரர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் வர வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் வழங்கப்படுகிறது. இதனால் ரேசன் கடைகளில் கூட்டம் முண்டியடிக்கும் நிலை இல்லை. ஆனால் டோக்கன் வைத்திருப்பவர்கள் காலையிலேயே ரேசன் கடைகளில் வந்து காத்திருந்தனர்.

அனைத்து ரேசன் கடைகளிலும் பாதுகாப்புக்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

ரொக்க பணத்தை கவர்களில் போட்டு வழங்கக்கூடாது என்று ரேசன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொருவருக்கும் ரூ.2,500 ரொக்கப் பணத்தை எண்ணி வெளிப்படையாகவே வாடிக்கையாளர்களிடம் ஊழியர்கள் வழங்கினார்கள்.
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் மக்கள்

சர்க்கரை, பச்சரிசியை மட்டும் எடை போட்டு வழங்கினார்கள். மற்ற பொருட்கள் அனைத்தும் பரிசுப் பைக்குள் வைத்து கொடுக்கப்பட்டது.

பொங்கல் தொகுப்பை பெற்றதும் சம்பந்தப்பட்ட அட்டைதாரர்களுக்கு அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு விட்டதாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து 13-ந்தேதி பரிசு பொருட்கள் வினியோகம் நடக்கிறது. குறிப்பிட்ட நாளில் கடைகளுக்கு சென்று வாங்க இயலாதவர்கள் 13-ந் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசு பொருட்கள் வாங்கியவர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது. ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுக்களாகவே வழங்கப்பட்டது.

சாதாரண குடும்பங்களுக்கு ரூ.2,500 என்பது பெரிய தொகை. எனவே பணத்தை கையில் வாங்கியதும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் வினியோகம் நடைபெறும். டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் போதும் என்று அறிவித்தும் எல்லோரும் காலையிலேயே கடைகள் முன்பு குவிந்து விட்டனர்.

ரேசன் கடைகளில் இருந்து பரிசு தொகுப்பை பெற்றவர்கள் முழுக்கரும்பு, கையில் பரிசு பை சகிதமாக தெருக்களில் கூட்டமாக சென்றது திருவிழா கூட்டம் போல் களை கட்டியது. 13-ந்தேதி வரை ரேசன் கடைகள் அனைத்தும் திருவிழா கோலமாகத்தான் காட்சி அளிக்கும்.