சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகள் – இதுவரையில் 103 நோயாளர்கள் அடையாளம்

233 0

சிறிலங்கா மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு அமைய இதுவரையில் 13 ஆயிரத்து 137 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இதன்போது 103 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை முன்னெடுக்கப்படும்.

அதற்கமைய நேற்று மாத்திரம் 108 அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது ஒருவருக்கு மாத்திரமே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் இதுவரை 13 ஆயிரத்து 137 அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது 103 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளன.

இந்த தொற்றாளர்களுடன் நெருங்கி பயணித்ததாக அடையாளங்காணப்பட்ட 604 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல்மாகாணத்தில் காணப்படும் மீன் சந்தைகளிலும் தற்போது அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய நேற்று மீன்சந்தை ஒன்றில் 23 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 180 பேருக்கு இவ்வாறு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் மூன்று பேருக்கு மாத்திரமே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.