கோவை, நீலகிரியில் 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

239 0

கோவை, நீலகிரியில் 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி ஒத்திகையை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்,

உலகம் முழுவதையும் புரட்டி போட்ட கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நாடுகளும் தயாராகி வருகின்றன. ஒரு சில நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி விட்டன.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக தடுப்பூசி வழங்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக இன்று கோவை மற்றும் நீலகிரியில் 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. அதன்படி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, போளூவாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், புருக்பாண்ட் ரோடு சீதாலட்சுமி மாநகராட்சி மருத்துவமனை, பி.எஸ்.ஜி. ஆஸ்பத்திரி, சூலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் காலை 9 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி ஒத்திகையை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து சுகாதார பணியாளர்கள், நர்சுகள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. தடுப்பூசி ஒத்திகையில் கலந்து கொண்ட முன்கள பணியாளர்கள் அனைவரின் பெயரும் நேற்றே ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அந்த குறுந்தவல்களுடன் வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அடையாள அட்டை போன்ற சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 2-வது அறையான தடுப்பூசி அறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தடுப்பூசி போடுவது போன்று ஒத்திகை நடந்தது. தடுப்பூசி போடப்பட்டதும், அவர்களுக்கு ஏதாவது பக்க விளைவுகள் உருவாகிறதா என்பதை கண்காணிப்பதற்காக 30 நிமிடம் கண்காணிப்பு (அப்சர்வேசன்) அறையில் தங்க வைக்கப்பட்டனர். 30 நிமிடம் முடிந்ததும் ஏதாவது பக்க விளைவுகள் உள்ளதா என சோதித்து விட்டு அவர்களை வீட்டிற்கு அனுப்பினர்.

இதேபோல் கோவையில் உள்ள மற்ற 4 மையங்களிலும் 25 பேர் கலந்து கொண்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகையில் கலந்து கொண்டனர்.

முன்னதாக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் மீது மலர்கள் தூவப்பட்டன.

நீலகிரி மாவட்டம் ஊட்டி சேட் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் குன்னூர் லாலி ஆஸ்பத்திரி, நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சுகாதார துறை அதிகாரிகள் முன்னிலையில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. கோவை, நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மையத்திற்கு 25 பேர் என மொத்தம் 200 பேர் பங்கேற்றனர்.