70 வயதை கடந்த தி.மு.க.வினர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை

235 0

தேர்தலில் குறிப்பிட்ட மூத்த தலைவர்களை தவிர 70 வயதை கடந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்ற முடிவை கட்சி மேலிடம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக ஐபேக் நிறுவனத்தினர் குக்கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கள நிலவரங்களை அறிந்து கட்சி மேலிடத்துக்கு தகவல் அளிக்கிறார்கள்.

அதன் அடிப்படையில் கட்சியினர், முன்னணி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதி அளிப்பதோடு அதை தேர்தல் அறிக்கையிலும் சேர்க்க முடிவு செய்துள்ளார்கள்.

கடந்த வாரம் தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி என்ற கிராமத்திற்கு சென்ற கனிமொழி எம்.பி. அந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை சந்தித்து உரையாடி இருக்கிறார்.

கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அந்த கிராமத்துக்கு சென்றிருக்கிறார். அங்கேயே தங்கி இருந்து கட்சி பணிகளையும் செய்து இருக்கிறார். இதை அங்குள்ளவர்கள் நினைவு கூர்ந்து இருக்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை கருணாநிதி பெரும்பாலான கிராமங்களை சுற்றி வந்தவர். இப்போது தி.மு.க. மீண்டும் அந்த பணியை கையில் எடுத்துள்ளது.

மக்கள் சந்திப்பு அவர்களின் ஆதரவை திரட்டுவது என்று ஒரு புறம் நடந்தது கொண்டிருக்க இன்னொரு புறத்தில் தேர்தலில் வேட்பாளர் தேர்விலும் மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளனர். பொதுவாக மாவட்ட செயலாளர், அமைச்சர் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதாக கட்சியினர் புலம்புவது உண்டு.

ஆனால் இந்த தேர்தலில் குறிப்பிட்ட மூத்த தலைவர்களை தவிர 70 வயதை கடந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்ற முடிவை கட்சி மேலிடம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரம் மூத்த நிர்வாகிகளின் மகனோ, மகளோ கட்சியில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தால் அவர்களது பெயர்களை பரிசீலிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

ஐபேக் நிறுவனம் நடத்திய கள ஆய்வில் இளம் நிர்வாகிகள் பலர் திறமையானவர்களாக இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது சுட்டி காட்டப்பட்டுள்ளது.

எனவே இளம் நிர்வாகிகளை அதிக அளவில் தேர்தலில் களம் இறக்கவும் முடிவு செய்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.