அம்பாறையில் வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கு விருதுகள் வழங்கி வைப்பு

204 0

விவசாயத்தின் மூலம் வளமான நாட்டிற்கு இளைஞர்களை திறம்பட பங்களிக்கும் நோக்கில் ‘பெருமை இளைஞர்கள் வளமான நாளை’ எனும் கருப்பொருளில் அமைந்த தேசிய நிகழ்ச்சித் திட்டம் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில், சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 01 ஆம் திகதி அம்பாறை இளைஞர் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ.டி.வீரசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பிரதம அதிதியின் உரையை அடுத்து, பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் முதலாமிடத்தைப் பெற்ற வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேசத்தில் முதலிடம் பெற்றவர்களுக்கு 10,000 ரூபாயும், மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர்களுக்கு 25,000ரூபாயும், மாகாணத்தில் முதலிடம் பெற்றவர்களுக்கு 50,000.00 ரூபாயும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.