கொரோனா வார்டில் அமைதியாக நின்று 2020-ம் ஆண்டுக்கு விடைகொடுத்த மருத்துவ ஊழியர்கள்

218 0

கொரோனா பாதிக்கப்பட்டோர் சிகிச்சைபெற்றுவரும் வார்டில் மருத்துவ ஊழியர்கள் அமைதியாக நின்று 2020-ம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2021-ம் ஆண்டு தொடங்குவதை வரவேற்றனர்.

சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 2020- ம் ஆண்டு முழுவதிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. இந்த கொரோனா வைரசால் 2020-ம் ஆண்டு உலக மக்களுக்கு மறக்க முடியாத  ஆண்டாகவே அமைந்தது.
வைரசால் இதுவரை 8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 18 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் 2020-ம் ஆண்டு மக்கள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்துள்ளனர். இந்த வைரஸ் தற்போது உருமாறி மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், இன்று 2021-ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. 2021 ஆம் ஆண்டு பிறந்ததை இன்று உலக நாடுகள் கொண்டாடி வரும் சூழலில் லட்சக்கணக்கானோர் தற்போதும் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், 2021 புத்தாண்டு கொண்டாட்டம் பிரேசில் நாட்டிலும் ஆர்வமாக கொண்டாடப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பால் மிகுந்த இன்னல்களை சந்தித்து வரும் நாடுகள்  பட்டியலில் முக்கிய நாடாக உள்ளது பிரேசில். அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு 76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
புத்தாண்டை அமைதியாக நின்று வரவேற்ற மருத்துவ ஊழியர்
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வைரஸ் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவ ஊழியர்கள் 2020-ம் ஆண்டை இறுகிய மனதுடன் கடந்தனர்.
அந்நாட்டின் சண்டோ அண்ட்ரே நகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்கள் புத்தாண்டு பிறந்த நேரத்தில் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று சில நிமிடங்கள் அமைதியாக நின்றனர்.
பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய 2020-ம் ஆண்டு முடிவடைந்து 2021-ம் ஆண்டு பிறந்ததை அவர்கள் அமைதியாக நின்று எந்தவித ஆரவாரமும் இன்றி வரவேற்றனர். மேலும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் படுக்கை அருகே சென்று அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை உணர்ச்சிகரகாக தெரிவித்தனர்.
2021-ம் ஆண்டு அனைவருக்கும் நன்மை பயக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என அவர்கள் வாழ்த்தினர்.