இந்தியாவில் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நாடு திரும்பிய மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
கொவிட் – 19 காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சி காரணமாக ஒரு தொகுதி பயணிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல்1124 விமானம் மூலம் சுமார் 283 பயணிகள் நேற்று (31) கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த நிலையிலேயே அமைச்சருக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
பல்வேறு தேவைகளின் நிமித்தம் குறுகிய கால பயண ஏற்பாடுகளுடன் இந்தியாவிற்கு சென்ற சுமார் 1500 இற்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் கொவிட் – 19 பரவலினால் ஏற்பட்ட போக்குவரத்து தடங்கல் காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருந்தனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை நாடிய நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையுடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஸ் குணவர்த்ன மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இலங்ககைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் மற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இதன் பலனாக இன்றைய தினம் முதலாவது தொகுதி பயணிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தேவையான சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு எந்தவிதமான நோய் தொற்றுக்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அழைத்து வரப்பட்டுள்ள குறித்த பயணிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சுகாதார நடைமுறைகளுக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட பின்னர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பயணிகள் அனைவரும் பியகம, கல்பந்த மந்றும் மாத்தறை போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் நாட்டிற்கு திரும்புவதற்காக காத்திருக்கும் ஏனையவர்களையும் விரைவில் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய குறித்த பயண ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்ற அமைச்சரின் விசேட பிரதிநிதி சோபிதா ராஜசூரியர் பத்மநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.