நாமல் ராஜபக்ச என்னுடைய பெயரை குறிப்பிட்டு ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளார் -அர்ஜுன ரணதுங்க

250 0

1786477701arjunaஅம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு பிரதமர் கூறவில்லை என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு பிரதமர் கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச என்னுடைய பெயரை குறிப்பிட்டு ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இக்கருத்தை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். பிரதமர் இவ்வாறானதோர் கருத்தை வெளயிடவில்லை. நான் இவ்வமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற போது, நாமல் ராஜபக்சவின் தந்தையின் தேர்தல்கள் பணியில் ஈடுப்பட்ட 582 பேரை பணிநீக்கம் செய்திருந்திருக்கலாம்.

நாமல் ராஜபக்ச இணைத்துக்கொண்ட 200 பேரையும் எம்மால் பணிநீக்கம் செய்திருக்கலாம். பிரதமரும் ஜனாதிபதியும் ஒரு போதும் அவர்களை பணிநீக்குமாறு கூறவில்லை. எனவே இவ்வாறு பொய்யுரைத்து புகழை ஈட்டிக்கொள்ள முயற்சிக்க வேண்டாமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பொருட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையின் அளவு அமெரிக்க டொலர் 400 மில்லியன்களென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அண்மையில் கருத்து வெளியிட்டார்.

ஆனால் எங்கள் புத்தகங்களிலோ அமெரிக்க டொலர் 1347 மில்லியன்களென பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அதாவது 1000 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக நாமல் ராஜபக்ச அறிந்திருக்கவில்லை.

மிகுதியான 1000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எங்கு சென்றுள்ளது என விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நான் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என கூறிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் போது தொழில் பாதுகாப்பு தொடர்பாக அதிகபட்ச கவனம் செலுத்தப்படுமெனவும் மேலும் குறிப்பிட்டார்.