பண்டிகைகளின் போது மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் – சுதத் சமரவீர

203 0

புதுவருடப்பிறப்பு மற்றும் அதன் பின்னரான பண்டிகைகளை வழமை போன்றல்லாமல் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுமாறும், இயன்றளவு மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

புதுவருடப்பிறப்புடன் ஏனைய சில பண்டிகைகளையும் கொண்டாடும் காலம் இதுவாகும். எனினும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வழமையைப் போன்று அவற்றைக் கொண்டாட முடியாது.

அண்மையில் சில பண்டிகைகளை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் கொண்டாடியமையே பல கொத்தணிகள் உருவாகக் காரணமாக அமைந்தது.

இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே பல கொத்தணிகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்களும் அதிகமுள்ளன.

எனவே தனிமைப்படுத்தல் விதிகளைப் பின்பற்றி பண்டிகைகளைக் கொண்டாடுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது சிவனொளிபாதமலை யாத்திரையும் ஆரம்பித்துள்ளது. ஏப்ரல் மாதம் வரை இந்த யாத்திரை தொடரும்.

எனவே பக்தர்களிடம் நாம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம். இம்முறை யாத்திரைக்குச் செல்வதை இயன்றளவு குறைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக முதியோர், நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனைத் தவிர்த்துக் கொள்வதே உகந்ததாகும் எனத் தெரிவித்தார்.