அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விலகுவதாக ரஜினி கூறவில்லை: பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி கருத்து

207 0

அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்திருந்தாலும் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விலகுவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறவில்லை என்றும், தனது அரசியல் நிலைப்பாடு குறித்துகருத்து கூறுவார் என்றும் ‘துக்ளக்’வார இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு நேற்று அவர் அளித்தபேட்டி:

‘நடிகர் ரஜினிகாந்த் உறுதியான நிலைப்பாடு கொண்டவர். எந்த நிலையிலும், எடு்த்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டார்’ என்றுஅவரது ரசிகர்கள், ஆதரவாளர்களிடம் ஒரு மதிப்பு இருந்தது. கட்சி தொடங்குவதில்லை என்ற முடிவால் ரஜினியின் இந்த மதிப்பு சரிந்து விடாதா?

கட்சி தொடங்குவதில்லை என்பதற்கு ரஜினியின் உடல்நிலையே காரணம். இதை அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் புரிந்து கொள்வார்கள். அரசியல் கட்சி தொடங்கினால் ஏற்படும் மன அழுத்தம் அவரது உடல்நிலையை மேலும்மோசமாக்கும். அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் பணி, பிரச்சாரம், எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பது போன்ற பணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை தாங்கும் சூழல்ரஜினிக்கு உடல் அளவில் இல்லை.கரோனா சூழலும் ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். நேற்று (டிச.28) இரவு அவர் என்னிடம் பேசினார். அப்போதும் இதைத்தான் அவர் கூறினார்.

ரஜினியின் முடிவை அவரது ரசிகர்கள், ஆதரவாளர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

“ரஜினி மக்கள் மன்றம் எப்போதும் போல செயல்படும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்” என்று தனது அறிக்கையில் ரஜினி கூறியிருக்கிறார். அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்று கூறியிருக்கிறாரே தவிர, அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விலகுவதாக அவர் கூறவில்லை. அரசியலில் தனது நிலைப்பாடு குறித்து தனது கருத்தை அவர் கூறுவார் என்றே நினைக்கிறேன்.

1996 போல தற்போதும் ரஜினி தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளீர்கள். 1996 தேர்தலில் திமுக – தமாகா கூட்டணியை ரஜினி ஆதரித்தார். வரும்தேர்தலில் யாரை ஆதரிப்பார்?

1996-ல் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினியின் ஆதரவுக் குரலால் தான் திமுக– தமாகா கூட்டணி பெரும் வெற்றிபெற்று திமுக மீண்டும் ஆட்சியைப்பிடித்தது. கருணாநிதி முதல்வரானார். தமிழகத்தில் அதிமுகவைப் பிடிக்காதவர்கள் திமுகவுக்கும், திமுகவைப் பிடிக்காதவர்கள் அதிமுகவுக்கும் வாக்களிப்பது வழக்கமாக உள்ளது. அதிமுக, திமுக இரண்டையும் பிடிக்காதவர்களின் வாக்குகளைப் பெறும்வல்லமை ரஜினிக்கு உள்ளது. இப்போது அவர் கட்சி தொடங்காவிட்டாலும் தன்னை நம்பும் வாக்காளர்களுக்கு வழிகாட்டலாம். அது புதியஅணியாகவும் இருக்கலாம். அதிமுக – பாஜக அணியாகக் கூட இருக்கலாம்.

ரஜினியின் முடிவால் அதிமுக கூட்டணியில் இணைந்தே ஆக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறதே?

ரஜினி கட்சி தொடங்கி பாஜக தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டிருந்தால் பாஜகவுக்குத் தான்இழப்பு அதிகமாக இருந்திருக்கும். இப்போது ரஜினி கட்சி தொடங்காததால் தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்குகிடைக்கும். ரஜினியின் முடிவால் அதிமுக கூட்டணியில் இணைந்தே ஆக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை.

இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.