கிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் நட்டஈடு வழங்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
கடந்த செம்ரெம்பர் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு இன்னும் இரணடு வாரங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் பொதுச் சந்தை வர்த்தகர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே ,
கிளிநொச்சி பொதுச் சந்தை தீயினால் எரிந்த விடயம் தொடர்பில் பிரதமர், நிதி அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோருடன் பேசியதற்கமைய, அவர்கள் எடுத்துக்கொண்ட நடவடிக்கையின் காரணமாக அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய இன்னும் இரண்டு வாரத்திற்குள் எரிந்த கடைகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கும், தொடர்ச்;சியாக தீயணைப்பு பிரிவை ஏற்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.
அத்துடன் நிரந்தர கட்டடம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே வியாபாரிகள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நாங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிப்பெற்றுள்ளது என்றார்.
இதேவேளை இதன்போது கருத்து தெரிவித்த சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார், சந்தை விவகாரம் தொடர்பில் ஆளுநர் பல தடவைகள் நேரடியாக விஜயம் செய்து வியாபாரிகளுடன் கலந்துரையாடி மேற்கொண்ட நடவடிக்கைக்களுக்கு அமைவாக நட்டஈடு மற்றும் தீயணைப்பு பிரிவு, சந்தைக்கான நிரந்தர கட்டடம் என்பன சாத்தியமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வியாபாரிகள் சார்பில் நன்றி கூறவேண்டும். மேலும் ஆளுநரின் இந்த முயற்சிகளை ஒரு சிலர் களங்கம் விளைவித்து வருவதோடு, அவரின் உழைப்புக்கும் உரிமை கோருகின்றனர் எனக்குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஆளுநரின் மேலதிக செயலாளர், கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர், கரைச்சி பிரதேச சபை செயலாளர், சந்தை வர்த்தக சங்கத் தலைவர் யேசுராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.