மக்களுக்கு நல்லது செய்வது தி.மு.க.விற்கு பிடிக்காது என்றும் பொங்கள் பரிசு திட்டத்தை தடுக்க முக ஸ்டாலின் சதி வேலை செய்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக சேலத்தில் இருந்து காரில் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல் மாவட்ட எல்லையான மல்லூர் அருகே அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டு நின்ற மக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம். எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி, அம்மா மறைவிற்கு பிறகு நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் சரி இந்த மாவட்டத்திலேயே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, இந்த மாவட்ட மக்களுடைய அன்பை பெற்ற அரசு அம்மாவுடைய அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு அம்மாவுடைய அரசு தான் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோட்டில் வாழ்கின்ற மக்களுக்கும் நன்மை செய்கின்ற ஒரே அரசு அம்மாவுடைய அரசு.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இன்றைக்கு ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்ற சூழ்நிலைகளை அறிந்து, வருகிற தை மாதம் தை பொங்கல் கொண்டாட இருக்கின்றோம். தமிழர் திருநாள் தைத் திருநாள் தை பொங்கலில் அனைத்து இல்லங்களிலும் தைப்பண்டிகை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2500 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து உங்களை சந்திக்கிறேன்.
அதோடு முழு கரும்பு, பொங்கல் தொகுப்பு அனைத்தும் உங்களுக்கு வழங்கி இந்த பண்டிகையை குடும்பத்தோடு ஒன்றாக இனைந்து மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கின்றோம்.
இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்குகின்றார்கள் என்ற ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்.
ஏனென்று சொன்னால் இந்த திட்டம் மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றன. இந்த திட்டம் நிறைவேற்றி விட்டால் அ.தி.மு.க. அரசுக்கு நல்லப் பெயர் வந்துவிடும் என்ற எண்ணத்திலே இந்த திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும். அதற்கு சூழ்ச்சி செய்து நேற்றைய தினமே பொய்யான அறிக்கையை வெளியிட தயாராகி, வெளியிட்டு இருக்கின்றார்.
அ.தி.மு.க. அரசை பொறுத்தவரைக்கும் கடந்த ஆண்டு குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. அப்போது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்துக்கு சென்ற கட்சி தான் தி.மு.க. என்பதை இந்நேரத்தில் நினைவு கூற கடமைப்பட்டு இருக்கின்றேன். ஆகவே மக்களுக்கு நல்லது செய்வது எதுவுமே தி.மு.க.வுக்கு பிடிக்காது.
இன்றைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சிறப்பாக பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசு குடும்ப அட்டைக்கு 2500 ரூபாய் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பை கொடுத்து வருகிற 4-ந்தேதி முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 2500 ரூபாய் வழங்கப்படும்.
எம்.ஜி.ஆர்.- அம்மா இருபெரும் தலைவர்கள் ஏழை, எளிய மக்கள் மகிழ்சியாக வாழ வேண்டும். அனைத்து வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என்று எண்ணினார்கள். அந்த எண்ணத்தை நிறைவேற்றப்படுகின்ற அரசு அ.தி.முக. தான்.
ஆகவே பொதுமக்கள் எப்போதும் அரசுக்கு துணை நிற்க வேண்டும். இந்த அரசு தான் ஏழை- எளிய மக்களை காக்க கூடிய அரசு.
இன்றைய தினம் கூட கிராமத்தில் அதிகம் பேர் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ- மாணவிகள். கிராமம் சூழ்ந்த பகுதி. அதிகமாக அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ- மாணவிகளுக்கு மருத்துவ இடம் கிடைப்பது அரிதாகவே இருந்தது. அதை நான் உணர்ந்து, அரசு பள்ளியில் படிக்கின்ற 41 சதவீதம் மாணவ- மாணவிகளுக்கு மருத்துவ கல்வியில் சேருவதற்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிந்தனை செய்து, அதை நடைமுறைப்படுத்திய அரசு அம்மாவுடைய அரசு.
இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 313 பேர் எம்.பி.பி.எஸ். சேருகிறார்கள். அடுத்த ஆண்டு மேலும் 1680 இடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படுகின்றன 11 மருத்துவக்கல்லூரிகள் மூலமாக. அதுவும் வருகின்றபோது கிட்டத்தட்ட 450 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கின்ற வாய்ப்பு கிடைக்கும். பல் மருத்துவ கல்லூரியில் 150 பேர் சேர்ந்து படிக்கின்ற வாய்ப்பு கிடைக்கும். இவர்களுடைய கல்வி செலவு கல்வி கட்டணத்ததை அம்மாவுடைய அரசே ஏற்கும் என சொல்லி இருக்கின்றேன்.
எனவே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து மகத்தான வெற்றியை தேடி தாருங்கள் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்