வடக்குக் கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தையே மக்கள் விரும்புகின்றனராம்

341 0

477a3dd2b30bb80622f13f66c6e62a91_xl-1வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றபோதிலும், அங்குள்ள பொதுமக்கள் இராணுவத்தினரின் பிரசன்னத்தையே விரும்புகின்றனர் என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசங்களில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் சூரியசக்தியினால் இயங்கும் இயந்திரங்கள் கையளிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டுமென பல்வேறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களிடம் வினவினால், அவசர நிலைமை, அனர்த்த நிலைமைகளில் உதவ இராணுவம் தேவைப்படுகிறது என்றே கூறுகின்றனர். எனவே அனர்த்த முகாமை மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக இராணுவத்தை அங்கு நிலைத்திருக்க செய்வது அவசியமாகும்.

அத்துடன், வடபகுதியில் சமூக, அரசியல் மற்றும் வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டிய அவசியமும் காணப்படுகிறது. இதனை இராணுவமும், பாதுகாப்பு அமைச்சும் தனித்து பூர்த்தி செய்ய முடியாது. இதற்கு தனியார் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவியும் தேவைப்படுகிறது’ எனவும் தெரிவித்துள்ளார்.