நாமக்கல்லில் இருந்து 6 நாள் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

282 0

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 6 நாட்கள் சூறாவளி பிரசாரத்தை மேற்கொள்கிறார். நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்த பிரசாரம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை சந்திக்க அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போன்றவர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் பிரசாரத்தை தொடங்கி விட்டது. கடந்த 19-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வின் பிரசாரம் முறைப்படி 27-ந்தேதி தொடங்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் நடந்த பிரசார தொடக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 6 நாட்கள் சூறாவளி பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்த பிரசாரம் நடைபெற உள்ளது. வருகிற 4-ந்தேதி வரை இந்த பிரசாரம் நடக்கிறது.
அப்போது பொதுக்கூட்டம், வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்தல், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், பிரமுகர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மீனவர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
முதலாவதாக இன்று நாமக்கல் மாவட்டத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இன்று காலை 8 மணிக்கு நாமக்கல்லில் உள்ள வெற்றிவிகாஸ் பள்ளியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து 8.30 மணிக்கு அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு செய்தார். ஆலய வளாகத்தில் உள்ள கூடத்தில் வணிகர்களுடன் கலந்துரையாடினார்.
அங்கிருந்து முதலைப்பட்டி கிராமத்துக்கு சென்றார். அங்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் முள்ளம்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினார். 11 மணியளவில் ராசிபுரம் சென்றார். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து சாலை வழியாக சென்ற அவர் அப்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.
எம்.ஜி.ஆர். சிலை அருகே நடந்த தெருமுனை பொதுக்கூட்டத்திலும் அவர் பேசினார். அடுத்து திருச்செங்கோடு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பஸ் நிலையம் அருகே வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.
அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் அதிபர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் குமாரபாளையம் சென்ற அவர் அ.தி.மு.க. பெண்கள் பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அடுத்ததாக பள்ளிப்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கபிலர்மலைக்கு சென்ற அவர் சாலைகளில் திரண்டிருந்த மக்களை சந்தித்து பேசினார். பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசினார்.
இரவு 7.45 மணியளவில் நாமக்கல் திரும்பும் அவர் குளக்கரை திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். வட்டார பிரமுகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இத்துடன் இன்றைய பிரசாரம் முடிகிறது.
நாளை (புதன்கிழமை) மீண்டும் பிரசாரம் தொடங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் சேந்தமங்கலம் செல்கிறார். அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. அது முடிந்ததும் அங்காநத்தம், வளையப்பட்டி ஆகிய இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
11.30 மணியளவில் திருச்சி மாவட்டத்துக்கு செல்கிறார். முதலாவதாக தொட்டியத்தில் வாழைத் தோட்டங்களை பார்வையிட்டு தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
பின்னர் பாக்கு தோட்டத்தை பார்வையிட்டு பண்ணைகளில் பணியாற்றும் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். அங்கிருந்து கண்ணனூர் செல்லும் அவர் கிராம விவசாயிகளை சந்திக்கிறார்.
அடுத்து துறையூர் வழியாக மண்ணச்சநல்லூர் செல்லும் அவர் அரிசி ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்களை சந்தித்து உரையாடுகிறார். மண்ணச்சநல்லூரில் பஜார், டோல்கேட் போன்ற இடங்களில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதன்பின்னர் லால்குடி செல்லும் அவர் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். பின்னர் புள்ளம்பாடியில் பொதுமக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாலை 6 மணியளவில் திருச்சி வருகிறார். சிந்தாமணி அண்ணா சிலை அருகே பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு, மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு ஆகியவை நடைபெறுகிறது.
இரவு 7.40 மணிக்கு முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார். அத்துடன் நாளைய பிரசார நிகழ்ச்சிகள் முடிகின்றன.
31-ந்தேதி (வியாழக்கிழமை) மீண்டும் திருச்சி மாவட்டத்தில் பிரசாரம் செய்யும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 8 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசுகிறார். அடுத்ததாக திருச்சி சோமசரசன் பேட்டையில் மகளிர் சுயஉதவிக்குழுவுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அடுத்து மரவனூர் வழியாக மணப்பாறை செல்லும் அவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
காவக்காரன்பட்டியில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழுவுடன் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
பின்னர் திருவெறும்பூர் செல்லும் அவர் சிறு-குறு சார்புநிலை தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார். மீண்டும் திருச்சி வரும் அவர் வட்டார பிரமுகர்கள், வணிகர் கழக பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், முன்னணி வணிகர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் ஆகியோருடன் தனித்தனியாக கலந்துரையாடுகிறார்.
பின்னர் திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். இரவு 7.45 மணியளவில் நாதர்வாளி தர்காவில் வழிபாடு செய்து விட்டு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார்.
1-ந்தேதி புத்தாண்டு அன்று பிரசாரம் செய்யவில்லை. 2-ந்தேதி மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார். அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அவரது பிரசாரம் நடக்கிறது. முதல் நிகழ்ச்சியாக பரமக்குடி தொகுதி பார்த்திபனூரில் கால்நடை பராமரிப்பாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
அதைத் தொடர்ந்து தெளிசாத்தநல்லூர் கிராமத்துக்கு செல்லும் அவர் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார்.
மேலும் மதுரை-ராமேசுவரம் ரோட்டில் உள்ள மண்டபத்தில் நெசவாளர்கள், சிறு வணிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அடுத்ததாக திருவாட்டாறில் மகளிர் சுய உதவிக்குழுவுடன் சந்திப்பு, ராமநாதபுரத்தில் ஜமாத் பிரமுகர்களுடன் சந்திப்பு, மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இதன் பின்னர் 4.45 மணியளவில் திருபுல்லாணி கிராமத்துக்கு செல்லும் அவர் மீனவ பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.
கடலாடியில் மரக்கரி தயாரிப்பாளர்களுடன் சந்திப்பு நடக்கிறது. இரவு 7.15 மணியளவில் சாயல்குடியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து கன்னிராஜபுரத்தில் உள்ளூர் பிரமுகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
3-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி கயத்தாறு மணிமண்டபத்தில் மரியாதை செலுத்துகிறார்.
வில்லிச்சேரியில் பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடல், 10 மணியளவில் கோவில்பட்டி செல்லும் அவர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அடுத்து சிறு வணிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் எட்டயபுரத்தில் நெசவாளர்கள், விளாத்திகுளத்தில் மிளகாய் விவசாயிகள் சந்திப்பு, குனியமுத்தூரில் சிறு-குறு வணிகர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
மாலை 6.30 மணியளவில் தூத்துக்குடி செல்லும் அவர் சாலை பணியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். அடுத்து மாநகராட்சி அலுவலகம் முன்பு பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.
இதன்பின்னர் பனிமய மாதா ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார். மேலும் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறுகிறது.
இறுதியாக டாக்டர்கள், தொழில்அதிபர்கள், வணிகர்களை சந்தித்து பேசுகிறார்.
4-ந்தேதி மாலை 4 மணிக்கு கருங்குளத்தில் பிரசாரத்தை தொடங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் ஸ்ரீவைகுண்டம் சென்று வைகுண்டநாதர் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
அடைக்கலாப்புரத்தில் விவசாயிகள், கருப்பட்டி உற்பத்தியாளர்களுடன் சந்திப்பு, திருச்செந்தூர் வீரபாண்டியப்பட்டிணத்தில் மீனவ சமுதாய பிரதிநிதிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பின்னர் தூத்துக்குடி திரும்பும் அவர் உள்ளூர் பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அத்துடன் 6 நாள் பிரசார நிகழ்ச்சி முடிகிறது.