புதிய COVID-19 மாறுபாடு இலங்கைக்குள் அடையாளம் காணப்படவில்லை !

186 0

பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டு வரும் புதிய கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபாடு இலங்கைக்குள் கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு அங்கு அடையாளம் காணப்பட்ட புதிய தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் நேற்று (28) குறித்த செய்தியை ஆதவன் செய்தி வெளியிட்டிருந்தது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் விமான நிலையத்திற்கு வந்த பின்னர் ஹோட்டல்களில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தப் படுகின்றார்கள் என்றும் பின்னர் வீடுகளில் மேலும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வெளிநாட்டில் இருந்து திரும்புபவர்கள் சமூகத்துடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு புதிய கொரோனா தொற்றின் மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.