கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஒருதலைப்பட்சமாக முடிவெடுப்பது தொடர்பில் ஐதேக எச்சரிக்கை

193 0

கொரோனாவைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்த விவகாரத்திற்கு தீர்வைக் காண்பது மேலும் தாமதமானால் அது இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பும் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கு வாய்ப்பாக அமையும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது சர்வதேச மையப்படுத்தப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள அவர், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள யுத்தகால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விட இது பாரிய நெருக்கடியாக உருவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி எப்போதும் பௌத்தமதத்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது அதேவேளை ஏனைய மதங்களை சேர்ந்த மக்களின் உரிமைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக வெவ்வேறு இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து மத தலைவர்களையும் செவிமடுப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பை சுகாதார அமைச்சு ஏற்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் விவகார, கிறிஸ்தவ விவகார, பௌத்த விவகாரத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கலாசாரத் திணைக்களத்தையும் உள்வாங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருதலைப்பட்சமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டால் இலங்கையின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.