சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 31 பேர் கைது!

269 0

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாதமை முதலான குற்றச்சாட்டுகளில் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த குற்றச்சாட்டுகளில் இதுவரையில் நாடு முழுவதும் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களையும், மேல் மாகாணத்திற்குள் உள்நுழைபவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் ரெபிட் என்டிஜன் பரிசோதனை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 380 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 598 பேரில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 541 பேரும், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 52 பேரும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 692 ஆக உயர்வடைந்துள்ளது.