பிரான்ஸ்-ஜப்பானிலும் புதிய வகை கொரோனா பரவியது

228 0

இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்களால் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் புதிய வகை கொரோனா பரவியுள்ளது.

இங்கிலாந்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது அங்கு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவர்களால் இந்த புதிய வகை கொரோனா பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு பரவிய வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பைவிட பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா பரவுவதால் அந்நாட்டுடனான விமான போக்குவரத்துக்கு இதுவரை 50 நாடுகள் தடை விதித்துள்ளன. ஆனாலும் இங்கிலாந்தில் இருந்து ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

இந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் பரவி உள்ளது.

இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு திரும்பிய ஒருவர் புதிய வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த நபர் லண்டனில் இருந்து கடந்த 19-ந் தேதி பிரான்சுக்கு திரும்பினார். அப்போது அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. அதன்பின் அவருக்கு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பானிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி இருப்பதை சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. கடந்த 18 மற்றும் 21-ந் தேதிகளில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 5 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 60 வயது ஆணுக்கு சோர்வு இருந்தது. மற்ற 4 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இதையடுத்து 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவின் 8 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கான பிராந்திய இயக்குனர் ஹன்ஸ் குலுகே கூறும்போது, ‘தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது அவசியம். உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் இளம் வயதினர் இடையே பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது’ என்றார்.