பொங்கல் தொகுப்பை வழங்குவதற்காக இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது. ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
பொங்கல் பண்டிகையை யொட்டி ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார்.
இதன்படி 2.10 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்குவதற்காக இன்று (சனிக்கிழமை) முதல் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது.
ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த டோக்கனில் ரேஷன் கடைக்கு எந்த தேதியில் வந்து பொருட்கள் வாங்க வேண்டும், எத்தனை மணிக்கு வர வேண்டும் என்ற விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.
தினமும் 200 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் கொடுக்கும் வகையில் இந்த டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. காலை 100 குடும்ப அட்டைகளுக்கும், பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் பொருட்கள் வழங்கும் வகையில் இந்த டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 31-ந்தேதி வரை இந்த டோக்கன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் வாங்கியவர்களுக்கு வருகிற ஜனவரி 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பை ஒரு பையில் போட்டு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளுக்கு கார்டுதாரர்கள் ஒரே சமயத்தில் கூட்டமாக நிற்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
காலையில் பொருட்கள் வாங்க முடியாத குடும்ப அட்டைதாரர்கள் மதியம் வரும் பட்சத்தில் அவர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ரேஷன் கடைதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
டோக்கனில் குறிப்பிட்ட நாளில் வந்து பொங்கல் தொகுப்பை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13-ந்தேதி வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருட்கள் வாங்க வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொக்கப் பணம் ரூ.2 ஆயிரம் ஒரு நோட்டாகவும், ரூ.500 ஒரு நோட்டாகவும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு இல்லாதபட்சத்தில் ஐந்து 500 ரூபாய் நோட்டுகளாக வழங்க வேண்டும் என்றும் எக்காரணத்தை கொண்டும் கவரில் ரூ.2,500 ரொக்கப் பணத்தை வைத்து கொடுக்க கூடாது என்றும் ரேஷன் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரேஷன் கடைகளும் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். மாலை 5.30 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு வரிசையில் நிற்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வரிசையில் காத்திருக்கும் யாரையும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை நிற்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஆண்-பெண்களுக்கு தனித்தனி வரிசையை ஏற்படுத்தி பொருட்களை வேகமாக வழங்க வேண்டும், பொருட்கள் வாங்கியவர்களுக்கு எஸ்.எம்.எஸ். தகவல் சென்றடையும் வகையில் பதிவுகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரேஷன் கடைகள் முன்பும் பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வாங்கும் வகையில் சதுரங்கள், வட்டங்கள் வரைந்து அதன்படி வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் ஆயிரம் கரும்பு முதல் 1,800 கரும்புகள் வரை தேவைப்படுவதால் இந்த கரும்புகளை ரேஷன் கடையில் பாதுகாப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஏன் என்றால் கரும்பு கட்டுகளை பக்கத்தில் திறந்த வெளியில் வைக்க வேண்டி உள்ளது. அப்போது அங்குள்ள சிறுவர்கள் கரும்புகளை எடுத்துச் செல்லும் நிகழ்வுகளும் கடந்த முறை நடந்ததால் இந்த முறை அதை பாதுகாப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று கூறுகின்றனர்.